
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முடிவில் இங்கிலாந்து அணி களமிறங்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியில் சிறப்பான சம்பவங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முகமது ஷமி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதால் 5ஆவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.
அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து யாராவது ஒருவர் நீக்கப்பட வேண்டும் ஆனால் முகமது ஷமிக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் நிச்சயம் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக ஷமி விளையாடும் பட்சத்தில் யார் வெளியேற்றப்படுவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.