சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் தனித்து நிற்கும் இடத்தில், ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து, அதைச் செய்து முன்னேறுவதுடன் எங்களுக்கான வெற்றியையையும் தேடிக் கொடுக்கிறார்கள் என வெற்றிக்கு பின் பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Trending
அதன்பின் களமிறங்கிய ரியான் பராக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இப்போட்டியில் டாஸ் என்பது ஆட்டத்தின் முடிவை மாற்றக்கூடியதாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த விக்கெட்டில் பந்து சற்று நின்று வந்தது. அதனை அனுபவம் வாயந்த போல்ட், பர்கர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு உதவினார்கள். டிரென்ட் போல்ட் கடந்த 10 முதல் 15 வருடங்கள் விளையாடி வருகிறார். நாங்கள் புதுப்பந்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவருக்கும் தெரியும். நாங்கள் 4 அல்லது 5 விக்கெட் விழும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் அதைச் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தது.
எங்கள் அணியில் தனிப்பட்ட திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தனித்து நிற்கும் இடத்தில், ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து, அதைச் செய்து முன்னேறுவதுடன் எங்களுக்கான வெற்றியையையும் தேடிக் கொடுக்கிறார்கள். ஆவேஷ் கான் மற்றும் சஹால் ஆகியோர் நாங்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை உணர்ந்தார்கள். மேலும் அவர்கள் விக்கெட்டை எதிர்பார்க்காமல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார்கள். யுஸ்வேந்திர சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் என்று நினைக்கிறேன். மேலும் அவ கடந்த 2-3 வருடங்களாக எங்களுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now