
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் நிச்சயம் முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 4ஆவது அணியாக எந்த அணி முன்னேறும் என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த 4வது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இதில் பாகிஸ்தான் அணி முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்று சிறப்பாக தொடங்கினாலும், அடுத்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தோல்விக்கு பாபர் ஆசாமின் பொறுப்பில்லாத கேப்டன்சியே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கேப்டன் பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.