
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவிசுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 108 ரன்களை விளாசினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக டோனி டி ஸோர்ஸி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில், 114 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 108 ரன்களை விளாசினார் சஞ்சு சாம்சன். அதுமட்டுமல்லாமல் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்கு பின் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.