சுரேஷ் ரெய்னா ஒரு லெஜண்ட் - குமார் சங்கக்காரா!
சுரேஷ் ரெய்னா ஏன் ஏலம் போகவில்லை என்ற காரணத்தை சங்கக்கரா விளக்கியுள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டித்தூக்கியது. ஏற்கனவே தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்கவைத்திருந்தது.
இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய 21 பேரில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும், 14 பேர் உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 48 கோடியில், 2.85 கோடி மீத தொகை இருந்தது.
Trending
இந்த தொகையை பயன்படுத்தி ஷாருக் கான் போன்ற திறமையான வீரர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். சுரேஷ் ரெய்னாவைக் கூட அடிப்படை தொகையான 2 கோடிக்கு வாங்கியிருக்கலாம். ஆனால், சிஎஸ்கே அந்த தொகையை மிச்சப்படுத்தியது. இது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அவர் ஏன் வாங்கப்படவில்லை என்ற காரணத்தை இதுவரை சிஎஸ்கே கூறவில்லை.
இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்கக்கரா, சுரேஷ் ரெய்னா ஏன் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறித்துப் பேசினார்.
அதில், “ரெய்னாவை ஏன் வாங்கவில்லை என்பதற்கு பல காரணங்களை கூறலாம். ஆண்டுகள் செல்ல செல்ல புதிய வீரர்கள், அணிக்குள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். இதனால், பழைய வீரர்களின் தேவை இல்லாமல் போகலாம்.
ஐபிஎலில் ரெய்னாவின் புகழ் உச்சத்தில்தான் இருக்கிறது. ஐபிஎலில் அவர் ஒரு லெஜண்ட். சீசன்கள் மாறினாலும், ரெய்னாவின் அதிரடியில் எந்த மாற்றங்களும் இல்லாமல்தான் இருந்தது. இருப்பினும், புதிய வீரர்கள் வருகை மற்றும் எதிர்கால திட்டம், வீரரின் பார்ம் அனைத்தையும் வைத்துதான் அணிகளால் செயல்பட முடியும்.
இந்த மூன்றில், இரண்டாவது ஒத்துப் போனால்தான் வீரரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும். இதனால்தான், ரெய்னாவை எந்த அணியும் வாங்கவில்லை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் பங்கேற்கவில்லை. சொந்த காரணங்களுக்காக விலகினார். இதனைத் தொடர்ந்து 14ஆவது சீசனில் சிறப்பான முறையில் ரன்களை குவிக்கவில்லை. இதனால், சில போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
மேலும் இவருக்கு 35 வயது வேறு ஆகிறது என்பதால்தான் சிஎஸ்கே கூட ரெய்னாவை வாங்கவில்லை என்ற பொதுவான விமர்சனங்கள் இருக்கிறது. இருப்பினும், 2 கோடி மீதம் இருந்தும் ரெய்னாவை சிஎஸ்கே வாங்காதது ஏற்புடையது அல்ல என ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now