
நிறைவு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜிம்பாப்வே தொடரில் ஷிகர் தவான் தலைமையில் 2ஆவது நிலை இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்மின்றி விமர்சனத்தில் தவித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மாத ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சமீபத்திய தொடர்களில் அசத்திய சீனியர் வீரர்களும் அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மற்றொரு இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.