
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று லீக் போட்டிகள் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. இதில் ஒரு போட்டி மட்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மீதமுள்ள இரண்டு போட்டிகளும் வெளிமைதானங்களில் நடந்தவை. இவை அனைத்திலும் தோனி ஏழாவது அல்லது எட்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். துரதிஷ்டவசமாக மும்பை மைதானத்தில் இவர் களமிறங்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தையும் அடைந்தனர்.
மைதானத்திற்குள் தோனி வந்தாலே ரசிகர்களின் கரகோஷம் மட்டுமே உச்சத்தில் இருக்கிறது. இதனை, சிஎஸ்கே ஆடிய மூன்று மைதானங்களிலும் பார்க்க முடிந்தது அவரது பேட்டிங்கை எப்போது பார்க்கலாம் என்று பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் களமிறங்கி 10 பந்துகளுக்குள் பிடித்துவிட்டு ஆட்டம் இழந்து விடுகிறார். பலரும் அவரது பேட்டிங் ஆர்டரை இன்னும் முன்னே இறங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் தோனி களம் இறங்கினால் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வது போலவும் இருக்கும், கூடுதல் பந்துகளை பிடித்தது போலவும் இருக்கும் என்று பேசியுள்ளார்.