
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிரௌலி 48 ரன்கள் எடுத்தனர்.
பின் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானஸ் 66, பிரண்டன் கிங் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் அபாரமான சதமடித்து 109 ரன்கள் குவித்தார். அவருடன் ஷிம்ரான் ஹெட்மையர் 32, ரோமரியா செப்பார்ட் 49 ரன்கள் எடுத்ததால் 48.5 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியும் சந்தித்த படுதோல்வியிலிருந்து இன்னும் மீளாத இங்கிலாந்து இத்தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. மறுபுறம் 2023 உலகக் கோப்பைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.