
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் சைஃப் ஹொசன் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் 12 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 ரன்னிலும், மஹிதுல் இஸ்லாம் 17 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான சௌமியா சர்க்காரும் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் கேப்டன் மஹெதி ஹசன் மிராஸ் 32 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ரிஷாத் ஹொசைன் 39 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், அலிக் அதனஸ் ஆகியோர் தலா 2 விகெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அலிக் அதனாஸ் 28 ரன்களிலும், கேசி கார்டி 35 ரன்னிலும், அகீல் அகஸ்டே 17 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.