பாட் கம்மின்ஸ் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் - சுனில் கவாஸ்கர்!
வரவுள்ள 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தியதுடன் கோப்பையையும் வென்று கொடுத்த பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
Trending
மிகப்பெரும் தொகைக்கு பாட் கம்மின்ஸ் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த சீசனில் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த சீசனில் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டனுக்கான தேர்வாகவும் பாட் கம்மின்ஸை அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்துவார் என முன்னாள் ஜாமபவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சன்ரைசர்ஸ் அணி பாட் கம்மின்ஸ் வாங்கியதை ஒரு புத்திசாலித்தனமான முடிவாக நான் பார்க்கிறேன். ஒருவேளை இது அவருக்கு கொஞ்சம் அதிக விலையாக தோன்றலாம். இருப்பினும் இது புத்திசாலித்தனமான முடிவாகும். ஏனெனில் கடந்த முறை இல்லாத தலைமைத்துவத்தை அவரால ஹைதராபாத் அணிக்கு கொடுக்க முடியும்.
ஏனெனில் கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி மேற்கொண்ட பந்துவீச்சு மாற்றங்கள் பெரும் குழப்பமாக இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் நிறைய போட்டிகளில் தோல்வியையும் தழுவின. எனவே இப்போது பாட் கம்மின்ஸ் அவர்களிடம் இருப்பதால் நிச்சயம் அவர் தான் அணியின் கேப்டனாக செயல்படுவார். அது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now