
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் உலகின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இணைந்து விளையாடவுள்ளதால் இத்தொடரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதுபோக நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரும் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி வீரர்களை ஐபிஎல் செயல்பாடுகளை கருத்துக்கொண்டு தேர்வு செய்யவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய இளம் வீரர்களும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாக முயற்சி செய்வார்கள் என்பது இத்தொடரின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்றும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே லட்சியம் என்றும் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் முழு உடற்தகுதியுடனும் உள்ளார்.