
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 5 ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் 25 ரன்னிலும், வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், திலக் வர்மா 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் 73 ரன்களையும், நமந்தீர் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி 39 ரன்களையும், விப்ராஜ் நிகம் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யேரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.