
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் 3விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மைதானத்தில் அனைத்து திசைகளிலும் எளிதாக அடித்த ஆடும் திறமை படைத்த இவருக்கு மிஸ்டர் 360 என்ற பட்டமும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான வீரர்களில் ஒருவராக திகழும் ஏபிடி வில்லியர்ஸ், கடந்த 2011 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் 157 போட்டிகளில் பங்கேற்று 4,552 ரன்கள் அடித்துள்ள ஏபிடி வில்லியர்ஸ் 2 சதங்களும் 37 அறைசதங்களும் அடித்துள்ளார். விராட் கோலிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக வலம் வந்த ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடிய காலத்தில் எப்படியாவது பெங்களூரு அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிடலாம் என்று பலமுறை முயற்சி செய்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.