IND vs NZ: அஸ்வினை புகழும் வெட்டோரி!
இப்படி ஒருவர் பந்துவீசி நான் பார்த்ததில்லை என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி புகழ்ந்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 345 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் தற்போது இந்திய அணி தங்களது 2ஆவது இன்னிங்சை விளையாடியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் குவிந்துள்ளது. மேலும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சி உள்ளதால் போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி வெகுவாக பாராட்டியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய வெட்டோரி, “இந்திய அணி 345 ரன்கள் குவித்த பிறகு நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தைக் கண்டது. துவக்க வீரர்கள் இருவரும் 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அஸ்வின் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மைதானத்தில் அஸ்வின் வெவ்வேறு வகையான பந்துகளை தொடர்ந்து வீசினார்.
தொடர்ந்து அவர் பந்து வீசிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது போன்று பந்து நின்று வரும் மைதானங்களில் அஸ்வின் மகிழ்ச்சியுடன் பந்து வீசுகிறார். அதுமட்டுமின்றி பேட்ஸ்மேன்களை எவ்வாறெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமோ அதற்கேற்றார்போல் விதவிதமாக பந்து வீசுகிறார். அவர் எப்படி மாற்றி மாற்றி பந்து வீசினாலும் அவருடைய ரிதம் எந்த இடத்திலும் சரியவில்லை.
அவரிடம் இருக்கும் அனைத்து திறமைகளையும் வெளிக் காட்ட விரும்புகிறார். அந்தவகையில் இன்று அவர் வீசிய பந்துகளை போன்று மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் வீசி நான் பார்த்ததே கிடையாது. இந்த பாராட்டுக்கு அவர் தகுதியானவர் தான் ஏனெனில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றனர்” என்று புகழ்ந்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now