
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு 7 வருடங்கள் கழித்து வந்துள்ளனர். எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருதரப்பு தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய மண்ணில் கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் வந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உட்பட தற்போதைய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தங்களுடைய கேரியரிலேயே முதல் முறையாக இப்போது தான் இந்திய மண்ணிற்கு வந்துள்ளார்கள். அந்த சூழ்நிலையில் பல்வேறு அம்சங்களிலும் தங்களுக்கு எதிரான கோட்பாடுகளை வைத்திருக்கும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எம்மாதிரியான வரவேற்பு கொடுக்கப்படும் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள்.
ஆனால் விருந்தினர்களை உபசரிக்க தவறாத இந்தியர்கள் ஹைதராபாத் நகருக்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களுக்கு நிகரான உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதே போல தோளில் துண்டு போட்டு தலையில் பன்னீர் தெளித்து பிசிசிஐ கொடுத்த வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த பாபர் அஸ்ஸாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சமூகவலைகளில் நன்றி தெரிவித்தனர்.