‘சிபாரிசு இருந்தால்தான் கேப்டன்’ - புதிய சர்ச்சையை கிளப்பிய ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரிகளுக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், கடந்த 6 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததில் இருந்து பிசிசிஐ மீதும், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீதும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.
சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த ஹர்பஜன் சிங், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து அப்போதைய கேப்டன் தோனியிடம் பல முறை விளக்கம் கேட்டதாக கூறினார். ஆனால் அதற்கு தோனி எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை, ஒருவிதத்தில் என் வாய்ப்புகள் பறிபோனதற்கு தோனியும் மறைமுகமான காரணமாக இருக்கலாம் என்பது போல சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.
Trending
இந்நிலையில் மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஹர்பஜனிடம் கேப்டனாக நீங்கள் செயல்படவில்லை என்ற வருத்தம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கேப்டனாக செயல்படுவதும் ஒரு சாதனை தான். ஆனால் நான் கேப்டனாக நியமிக்கப்பட, எனக்கு பிசிசிஐ-ல் யாரும் நெருங்கியவர்கள் இல்லையே?.. இந்திய அணி கேப்டனாக ஆக வேண்டும் என்றால் பிசிசிஐ-ல் பெரும் அதிகாரத்தில் இருக்கும் யாரையேனும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த சிபாரிஸில் தான் ஆக முடியும்.
நான் கேப்டன்சி செய்ய முழு தகுதியுடையவன். பல கேப்டன்களே எனது அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுள்ளனர். எனினும் கேப்டனாகவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை. என் தேசத்திற்காக நான் சிறப்பான சேவை செய்துள்ளேன் என்ற நிம்மதி எனக்கு உள்ளது என ஹர்பஜன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now