இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதற்கு இருக்கிறது. இந்திய அணி ஆரம்ப கட்டப் போட்டிகளில் மிகவும் வலிமையான அணிகளை எதிர்கொள்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பாகிஸ்தான் அணி அக்டோபர் ஆறாம் தேதி, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.
Trending
இந்த இரண்டு அணிகளும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மோத இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் மிக அதிகபட்சமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் வைத்து ஆஃப்கானிஸ்தானையும், பெங்களூரில் வைத்து ஆஸ்திரேலியாவையும், அகமதாபாத்தில் வைத்து இந்திய அணியையும் எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து மறுப்பு கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளிகள் வைக்கப்பட்டு கடந்த வாரத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது.
தற்போது இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனரும் தலைமை பயிற்சியாளருமான மிக்கி ஆர்தர் கூறுகையில், “உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது. இரு நாடுகளுக்கு இடையேயான உணர்வுகள் மற்றும் உறவுகள் பார்வையில், அது உருவாக்கும் ஆர்வத்தையும் அதனுடன் செல்லும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் நீங்கள் கிரிக்கெட் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு உலகக்கோப்பையை வெல்ல விரும்பினால் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஒரே சிரத்தையோடு முயற்சியோடு சிறப்பாக விளையாடினால் மட்டுமே உலகக் கோப்பை மாதிரியான பெரிய கோப்பைகளை வெல்ல முடியும். நாங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடுவது குறித்து விவாதித்தோம். ஆனால் அது விவாதம் மட்டும்தான். சென்னையில் ஆஃப்கானிஸ்தான் அணி உடன் நாங்கள் விளையாட கூடாது என்பது எங்களுடைய முழு திட்டம் கிடையாது. எந்த அணியும் அவர்களோடு எங்கும் விளையாட தயாராகத்தான் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now