
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த அந்த அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஏனெனில் இந்த போட்டி தொடங்கி இலங்கை அணி தங்களது இன்னிங்ஸை ஆரம்பித்ததும் மிகச் சிறப்பாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கே 125 ரன்கள் குவித்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. அதன் பின்னர் 157 ரன்களுக்கு 2-ஆவது விக்கெட்டை இழந்த வேளையில் நிச்சயம் இலங்கை அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வேளையில் அந்த அணியின் முக்கிய வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோரை அடுத்தடுத்து காலி செய்த ஆடம் ஸாம்பா, சமிக்கா கருணரத்னே மற்றும் தீக்சனா என பின் வரிசையில் இருந்த வீரர்களையும் காலி செய்தார். மொத்தமாக இந்த போட்டியில் 8 ஓவர்களை வீசிய ஸாம்பா 1 மெய்டன் உட்பட 47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.