
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான் போன்ற தரமான வீரர்கள் இரு அணிகளிலும் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவ்விரு அணிகளின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
முன்னதாக 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2013இல் விடைபெற்ற சச்சினின் இடத்தை நிரப்பும் அளவுக்கு ரன் மெஷினாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 34 வயதிலேயே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 25,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 75 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார்.