
ஐபிஎல் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணியிடம் ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அணி முதல் இரண்டு விக்கட்டுகளை சீக்கிரத்தில் இழந்தாலும் அவர் அதைக் கண்டு கொள்ளாமல் அதிரடியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இறுதியாக 51 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கொல்கத்தா அணிக்காக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன்பு ஐபிஎல் முதல் சீசனின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக மெக்கல்லம் சதம் அடித்திருந்தார்.
போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், “நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த சதம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனாலும் கூட நான் எனது முயற்சியில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த வேலை இதுதான். அந்த வேலையை நான் சரியாக செய்ய வேண்டும். வெளிப்படையாக சொல்வது என்றால் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் வசதியாக இருந்தது. நீங்கள் ஆரம்பத்தில் 30, 40 ரன்கள் எடுத்து விட்டால் அதற்குப் பிறகு ரன் அடிப்பது எளிதானது.