
இந்தியாவில் நடைபெற்று வரும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் விளையாட குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் தகுதிபெற்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்திருந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமாகியிருக்கும் லக்னோ அணியின் ரசிகர்கள் ஒருபுறமும், 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் ஒருபுறமும் இந்த வெற்றியை காண ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய பெங்களூர் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்களை குவிக்கவே லக்னோ அணியால் மீண்டும் 193 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியை சேர்ந்த இளம் வீரரான ரஜத் பட்டிதார் திகழ்ந்தார்.