
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்கும் 590 வீரர்களை தங்கள் அணிக்கு தேர்வு செய்ய 10 அணிகளும் கோடிகளில் போட்டி போட உள்ளன. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் கணிசமான எண்ணிக்கையில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முஹமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த சீசனுடன் அந்த பதவியில் இருந்து விலகியதால் தங்கள் அணிக்கான புதிய கேப்டனை ஏலத்தின் வாயிலாக அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது.
கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் என பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். கடந்த 2020 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய அவர் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாமல் படுமோசமான ஃபார்மல் திண்டாடினார்.