
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் எம் எஸ் தோனி இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான கேப்டனாக கருதப்படுகிறார். ஒரு சிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி பல கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி மோசமான தருணங்களில் நின்ற போது அவர்களுக்கு ஆதரவு கரங்களை நீட்டி ஆலோசனைகளை வழங்கி அவர்களின் வளர்ச்சி உதவவும் அவர் எப்போதும் தவறியதில்லை.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திரம் ட்வயன் பிராவோ தொடங்கி தென்ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி வரை பல வெளிநாட்டு வீரர்களின் வளர்ச்சியில் தோனி பங்காற்றியுள்ளதாக அவர்களே சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் தோனி தமக்கு சகோதரர் போன்றவர் என இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் கீழ் நான் விளையாடிய போது அவரை எனது சகோதரர் போல உணர்ந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தலைமையில் நான் விளையாடியது மறக்க முடியாத ஒன்றாகும். அந்த வருடம் நாங்கள் கோப்பையையும் வென்றோம். அது எனது முதல் ஐபிஎல் சீசனான இருந்தபோதிலும் அதுவே எனது சிறந்த சீசனாகும். மேலும் எனது கனவு டி20 உலக அணிக்கு அவர்தான் கேப்டன் ஆவார்” என தெரிவித்துள்ளார்.