ஐபிஎல் 2022: தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
15ஆவது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 103* ரன்களும், மணிஷ் பாண்டே 38 ரன்களும் எடுத்தனர்.
அதன்பிறகு 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை அணிக்கு வழக்கம் போல் இஷான் கிஷன் (13) மற்றும் ரோஹித் சர்மா (6) விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ப்ரீவிஸ் (31), சூர்யகுமார் யாதவ் (37), திலக் வர்மா (37) போன்ற இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தாலும், பொலார்டால் கடைசி நேரத்தில் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய ரோஹித் சர்மா, தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நாங்கள் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்து விட்டோம். 6 போட்டிகள் நிறைவடைந்துள்ள போதிலும், எங்களுக்கு தேவையான ஆடும் லெவனை எங்களால் சரியாக கண்டறிய முடியவில்லை. எங்களின் தொடர் தோல்விகளுக்கு எந்த ஒரு விசயத்தையும் தனியாக குறிப்பிட்டு காரணமாக சொல்ல முடியாது.
பந்துவீச்சாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும், பும்ராஹ் மிக சிறப்பாக பந்துவீசுகிறார், அதே போல் மற்றவர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பது முக்கியம். இந்த தொடரில் நாங்கள் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, இருந்தாலும் அதற்காக சோர்ந்து போய்விட வில்லை, நிச்சயமாக தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்.
ஒரு கேப்டனாக மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன். நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now