இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பவர்பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் முதல் 6 ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசினார்கள் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஷபாஸ் அஹ்மத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 89 ரன்களையும், ஷபாஸ் அஹ்மத் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Trending
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்துடன் 65 ரன்களையும், அபிஷேக் போரல் 42 ரன்களையும், நிதானமாக விளையாடிய ரிஷப் பந்த் 44 ரன்களயும் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், “இந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த போது மைதானத்தில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல் இன்றைய ஆட்டத்தில் எந்த பனிப்பொழிவும் இல்லை. மேலும் நாங்கள் எதிரணியை 220 அல்லது 230 ரன்களுடன் தடுத்திருந்தால் இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும்.
இப்போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பவர்பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் முதல் 6 ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசினார்கள். அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. அதேபோல் நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்சில் பந்து நன்றாக நின்று வந்தது. அது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது, ஆனால் நாங்கள் 260, 270 ரன்களைத் துரத்த வேண்டியிருக்கும் போது, நீங்கள் தொடர்ந்து ஸ்கோரைப் பெற வேண்டி இருந்தது.
இதுபோன்ற நேரங்களில் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் திட்டங்களுடன் தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும். இப்போட்டியில் மெக்குர்க் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். நாங்கள் ஒரு அணியாக இதுபோன்ற வீரர்களிடம் இருந்து இப்படியான ஒரு இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த போட்டியில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை சரி செய்து, மீண்டும் கம்பேக் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now