
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவதும் உறுதியாகியுள்ளது.
இந்த நிலைமையில் புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்து இந்தியாவுடன் மோதபபோகும் அணி யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த ஒரு இடத்தை பிடிப்பதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானை விட அதிக ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக நியூசிலாந்துக்கு சற்று அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக தங்களுடைய கடைசி போட்டியில் இலங்கையை தோற்கடித்தால் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் நியூஸிலாந்து இருக்கிறது. மறுபுறம் இலங்கையிடம் நியூசிலாந்து தோற்று தங்களுடைய கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் இந்தியாவுடன் அரையிறுதியில் விளையாடலாம் என்ற நிலைமையில் பாகிஸ்தான் உள்ளது.