
ஷுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து டி20 தொடரும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சாதாரண வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும், இந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதன் காரணமாக அவர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் என்று வருன் சக்ரவர்த்தி கூறி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நிகழ்ச்சியின் போது பேசிய அவர், “இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.