
16ஆவது ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டனான கே.எல் ராகுல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கெய்ல் மெயர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த அயூஸ் பதோனி – ஸ்டோய்னிஸ் ஜோடி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசுர வேகத்தில் ரன் குவித்தது.
அயூஸ் பதோனி 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த போதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த போதிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரனும், தன் பங்கிற்கு பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது.