
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
அதன்படி, இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அந்த அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானுடன் இணைந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகமது நபி ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்ததன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இந்தா இமாலய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.