
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளைக் கொண்டு டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் டி20 அணிகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆடவர் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 வீரரான சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரவிஸ் பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் உள்பட 4 இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து இங்கிலாந்தின் பில் சால்ட், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா, உகாண்டாவின் அல்பேஷ் ரம்ஜானி ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோம் மகளிர் அணியில் இந்தியாவைச் சேர்ந்த தீப்தி சர்மா மட்டுமே இடம்பிடித்துள்ளார். அதேசமயம் பெத் மூனி, எல்லிஸ் பேரி, ஆஷ்லே கார்ட்னர், மேகன் ஷாட் என 4 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணியின் கேப்டனாக இலங்கைச் சேர்ந்த சமாரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.