
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக மொத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் வருத்தப்பட வேண்டி இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியில் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் எல்லாப் பக்கத்திலும் அடித்து நொறுக்கினார்கள். காயத்தில் இருந்து திரும்ப வந்த ஹெட் அப்படி எதையும் காட்டவில்லை. தொடர்ந்து இந்த உலகக் கோப்பையில் விளையாடியவர் போல விளாசி தள்ளினார்.
இன்னொரு முனையில் டேவிட் வார்னர் தன்னுடைய சிறப்பான பேட்டி ஃபார்மை மேலும் தீவிரப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 28 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் அரைசதம் அடித்தார். இதற்கடுத்து டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் தன்னுடைய அரை சதத்தை அடித்தார்.