
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து மஹ்முதுல்லா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.