
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக இலங்கை வீரர் சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரகளும் இடம்பிடித்துள்ளன.
அந்தவகையில் ஐசிசி தேர்வு செய்துள்ள இந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக பாகிஸ்தானின் இளம் அதிரடி வீரர் சைம் அயூப் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு அறிமுகமான சைம் அயூப் 9 போட்டிகளில் 3 சதங்கள், ஒரு அரைசதம் என 515 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 11 போட்டிகளில் 531 ரன்களையும் குவித்துள்ளார்.