
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 11 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷாக்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸும் 3 ரன்களில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.