
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தோல்வியுடன் தொடங்கி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதான த்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 30 ரன்களை எட்டவில்லை. அதேவேளையில் கொத்தாக விக்கெட் சரிவையும் சந்தித்தனர். ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் தரமான இந்திய சுழற்பந்து வீச்சு தாக்குதலில் தடுமாற்றம் கண்டது. இது ஒருபுறம் இருக்க அணியில் 2-வது பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி உள்ளது.
ஆடம் ஸம்பா மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே தேர்வாக இருக்கிறது. கிளென் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் அவரால் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி உள்ளார்.