
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மழை காரணமாக தமதமான இந்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விக்ரம்ஜித் சிங் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் வந்த நட்சத்திர வீரர்கள் காலின் அக்கர்மேன் 13, பாஸ் டி லீட் 2, ஏங்கல்பெர்ட் 19 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேஜா நிடமனுரு 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் லோகன் வான் பிக்கும் 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.