-mdl.jpg)
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டியில் இலங்கையை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
முன்னதாக லக்னோ நகரில் நடைபெற்ற அப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 210 ரன்கள இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 11 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து லெக் ஸ்டம்ப்பில் படவில்லை என்பதை உணர்ந்த வார்னர் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து பெரிய திரையில் சோதிக்கப்பட்ட போது பந்து லேசாக மட்டுமே லெக் ஸ்டம்ப்பில் உரசியது. இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் அதே தீர்ப்பு மீண்டும் வழங்கப்பட்டதால் கோபமடைந்த வார்னர் நடுவரை திட்டிக்கொண்டே சென்றது சர்ச்சையை உண்டாக்கியது. சொல்லப்போனால் வார்னர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கடுமையாக விமர்சித்திருந்தார்.