
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க்கும் 17 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - டெரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையில் 123 ரன்களையும் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.