
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழத்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை களமிறங்கியனர். இதில் டி காக் வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, கடந்த போட்டியில் அரைசதம் கடந்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 60 ரன்களைச் சேர்த்திருந்த் ஐடன் மார்க்ரம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டி காக் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.