
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 8 ரன்களை எடுத்திருந்த கேப்டன் டெம்பா பவுமா விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார். இதையடுத்து டி காக்குடன் இணைந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 83 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என் தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இது அவருடைய முதல் உலகக்கோப்பை சதமாகவும் அமைந்தது. ஆனால் அடுத்த பந்தையும் டி காக் அடிக்க முயற்சிக்க அது நேராக டி சில்வா கையில் தஞ்சமடைந்தது.