
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வந்த ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களது அதிரடி நீண்ட நேர நீடிக்கவில்லை. இதில் டேவிட் மாலன் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவும் 30 ரன்கள் எடுத்து ஆட்டாமிழந்தார். அதன்பின் அனுபவ வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மோயீன் அலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.