ஐசிசி உலகக்கோப்பை 2023: சதமடித்து போராடிய மஹ்முதுல்லா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழத்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை களமிறங்கியனர். இதில் டி காக் வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, கடந்த போட்டியில் அரைசதம் கடந்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 60 ரன்களைச் சேர்த்திருந்த் ஐடன் மார்க்ரம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டி காக் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்த ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். சதமடிக்கும் வரை பொறுமைக்காத்த குயின்டன் டிக் காக் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட, தனது 150ஆவது போட்டியில் 150 ரன்களைக் கடந்து அசத்தினார். அதேசமயம் ஹென்ரிச் கிளாசெனும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 15 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 174 ரன்களை எடுத்திருந்தா குயின்டன் டி காக் சிக்சர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்த ஹென்ரிச் கிளாசெனும் 8 சிக்சர்கள், 2 பவுண்டரி என 90 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 12 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஹ்முல் ஹொசைன் சாண்டோ, கேப்டன் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க அதுவரை நிதானம் காத்த லிட்டன் தாஸும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் மஹ்முதுல்லா ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினாலும், மறுமுனையில் களமிறங்கிய மெஹிதி ஹசன் 11, நசும் அஹ்மத் 19, ஹசன் மஹ்முத் 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்முதுல்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 111 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லா ஆட்டமிழக்க, வங்கதேச அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now