
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (903 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் முறையே 121, 34 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (885 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2ஆவது இடத்தையும், இதே டெஸ்டில் 163 ரன் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (884 புள்ளி) 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் டாப்-3 இடங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் முதல் 3 இடங்களை பிடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வாகும். 39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த அரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வகித்துள்ளனர்.
இப்பாட்டியளில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 4ஆவது இடத்தையும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 6ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். இப்பாட்டியளில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பாட்டியளில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் இவர் மட்டும் தான்.