
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தன. இதில் அதார்ஷ் சிங் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் குல்கர்னியுடன் இணைந்த முஷீர் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 155 ரன்களைச் சேத்தனர்.
இதில் கடந்த போட்டியைப் போல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷீர் கான் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷின் குல்கர்னி தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருன் இணைந்து விளையாடிய கேப்டன் உதர் சஹாரன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடித்த அர்ஷின் குல்கர்னி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 108 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.