Advertisement

சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!

அக்சர் பட்டேல் போன்ற 8ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 07, 2023 • 21:18 PM
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகாலமாக தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. உலகக் கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க உதவும் இத்தொடரில் சிறப்பாக விளையாடி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அந்த அணியில் ஒருநாள் போட்டிகளில் சுமாராக செயல்பட்டும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அதை விட இந்த அணியில் யுஸ்வேந்திர சஹால் தேர்வு தேர்வு செய்யப்படாதது மிகப் பெரிய ஆச்சரியமாக அமைந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய இருவருமே லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களாக இருக்கும் நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவரைப் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னரை தேர்வு செய்யாமல் தேர்வு குழுவினர் தவறு செய்துள்ளதாக ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

Trending


இந்நிலையில் பெரும்பாலான எதிரணிகளில் ஷாஹீன் அஃப்ரிடி, மிட்சேல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் போன்ற இடதுகை பவுலர்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியில் அரஷ்தீப் சிங் தேர்வு செய்யாததும், சஹால் கழற்றி விடப்பட்டதும் சரியான முடிவல்ல என்று ஹர்பஜன் சிங் மீண்டும் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“சஹால் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் இந்த அணியில் இல்லாதது பின்னடைவாகும். ஏனெனில் அரஷ்தீப் போன்ற இடது கை பவுலர் ஆரம்பகட்ட விக்கெட்களை எடுப்பதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார். குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க், ஷாஹீன் அஃப்ரிடி போன்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும் மேட்ச் வின்னரான சஹால் உலகின் வேறு ஏதேனும் அணியில் விளையாடியிருந்தால் நிச்சயம் உலகக்கோப்பையில் விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்க முடியும்

அந்தளவுக்கு தம்முடைய திறமைகளை நிரூபித்த அவர் மீண்டும் இந்திய அணியில் துரதிஷ்டவசமாக இடம் பிடிக்கவில்லை. ஆனாலும் நீங்கள் தேர்வு செய்துள்ள லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள் எப்போதும் ஒன்றாக விளையாட போவதில்லை. குறிப்பாக எதிரணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் அவர்கள் சேர்ந்து விளையாடப் போவதில்லை. எனவே அரஷ்தீப், சஹால் ஆகியோர் இந்த அணியில் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார். 

அந்த விவாதத்தில் பேசிய ஷோயிப் அக்தர், “சஹால் தேர்வு செய்யப்படாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக 220 – 230 ரன்கள் எடுத்து நீங்கள் தடுமாறினால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவைப்படும். ஆனால் டாப் பேட்ஸ்மேன்களே சரியாக செய்யாமல் போனால் 8ஆவது இடத்தில் விளையாடுவது மட்டும் அடித்து விடுவாரா?. அதாவது அக்சர் பட்டேல் போன்ற 8ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement