
நியூசிலாந்துடனான தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து தொடரில் தவான் தலைமையில் இளம் படை விளையாடிய சூழலில், வங்கதேச தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்குள் வருகின்றனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டிருப்பது தான் தற்போது ரசிகர்களின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. சஞ்சு சாம்சன் போன்று நல்ல ஃபார்மில் உள்ள வீரருக்கு வாய்ப்பு தராமல் பந்த்க்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் நியூசிலாந்து தொடரில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மறுபுறம் நன்றாக விளையாடிய சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிஷப் பந்த்-க்கு ஆதரவாக முன்னாள் வீரர் சாபா கரீம் பேசியுள்ளார். அதில், “நானாக இருந்தாலும் பந்த்-க்கு தான் வாய்ப்பு தந்திருப்பேன். ஏனென்றால் வங்கதேச தொடரில் அவர் எப்படி தான் விளையாடுகிறார் என்பதை நான் தெளிவாக பார்க்க வேண்டும். அவருக்கென நிலையாக 5ஆவது இடத்தை உறுதி செய்து விளையாட வையுங்கள். ஒருவேளை சொதப்பிவிட்டால் வேறு மாற்று வீரர்களுக்கு செல்லலாம். அது சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என சாபா கரீம் கூறியுள்ளார்.