இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்தலாம் - மைக்கேல் வாகன் ஆலோசனை!
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை வழங்கியுள்ளார்

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது.
இதனைத்தொடர்ந்தே ஐபிஎல் தொடரானது தற்போது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு வாரத்திற்கு பிறகும் நிலைமை சீராகுமா என்பது கேள்விகுறிதான். ஒருவேளை ஒரு வாரத்திற்கு பிறகும் இத்தொடரானது வேறு இடத்திற்கு மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் 16 லீக் போட்டிகளும் 4 பிளேஆஃப் போட்டிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதற்கிடையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் முடிக்க முடியுமா? எங்களிடம் அனைத்து வசதிகளும் உள்ளன, மேலும் இந்திய வீரர்களும் டெஸ்ட் தொடருக்கான இங்கேயே தங்கவும் முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
எதிர்வரும் ஜூன் 20 முதல் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் மைக்கேல் வாகன் அதனை மனதில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இத்தொடர் இந்தியாவில் நடத்த முடியாத பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களை பிசிசிஐ தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now