
கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அந்த தொடரின் போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி வரை முன்னேறி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியின் நான்காம் இடத்தில் விளையாடிய பேட்ஸ்மேன் குறித்த சர்ச்சை தற்போது கூட பெரிய அளவில் பேசப்படும் விசயமாக இருந்து வருகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக வரை அம்பத்தி ராயுடு தான் நான்காவது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரை கழட்டிவிட்ட இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை அந்த இடத்தில் தேர்வு செய்தது. பின்னர் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என வீரர்கள் மாற்றி மாற்றி நான்காம் இடத்தில் களமிறக்கப்பட்டதால் இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தது என இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.