வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம் - கிரேய்க் பிராத்வைட்!
எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு தற்பொழுது சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா மூன்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்ட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணம் பிப்ரவரி 13 ஆம் தேதி இறுதியாக நடக்கும் டி20 போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.
நடைபெற இருக்கும் இந்த இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையில் எதிர்கொள்கிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக கைய்ல் மேயர்ஸ் மற்றும் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் இருவரும் இந்த டெஸ்ட் தொடரை புறக்கணித்து விட்டார்கள். அடுத்து இந்த முறை நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இரண்டு வருடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
Trending
இதில் இரண்டு போட்டிகள் கொண்ட ஐந்து டெஸ்ட் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. ஒரே ஒரு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் விளையாடுகிறது. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வளர்க்க உதவாது என வெஸ்ட் இண்டிஸ் டெஸ்ட் கேப்டன் கருதுகிறார்.
இதுகுறித்து பேசிய கிரேய்க் பிராத்வைட், “எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது நல்ல ஒன்றாக இருக்கும். அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும். நாங்கள் எவ்வளவு அதிகம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோமோ அவ்வளவு எங்களுக்கு அது சிறந்ததாக நல்லதாக அமையும்.
நாங்கள் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல முறையில் விளையாடும் அளவுக்கு மாறும் பொழுது, கரீபியன் தீவுகளில் உள்ள இளைஞர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கின்ற ஆர்வம் ஏற்படும். அதுவே எங்களுக்கு அதிகம் டெஸ்ட் கிரிக்கெட் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் உலகெங்கும் அதிகம் விளையாடும் டி20 மற்றும் டி10 கிரிக்கெட் வடிவங்களில் விளையாடவே இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இதனால் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம். எனவே எங்களுக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் எங்கள் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை விளையாடாதது குறித்து நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர்கள் ஏன் இந்த தொடரில் விளையாடவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது அவர்களை மட்டுமே சார்ந்தது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now