எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன் - குசால் மெண்டிஸ்!
எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம் என தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற சோகமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற இலங்கை பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி கடைசி 44 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Trending
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் தற்காலிக கேப்டன் குசல் மெண்டிஸ், “எங்களுடைய அணியின் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆனால் ஆட்டத்தின் நடுவில் நாங்கள் தடுமாறினோம். இன்றைய ஆட்டத்தில் மட்டும் ஒரு 300 ரன்கள் அடித்து இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொண்டிருப்போம்.
ஏனென்றால் 300 ரன்கள் இருந்தால்தான் இந்த ஆடுகளத்தில் வெற்றி பெற முடியும். எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம். பல பந்துகளை ரன்கள் அடிக்காமல் வீணடித்து விட்டோம். கடந்த இரண்டு போட்டிகளாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக தான் விளையாடினார்கள். ஆனால் இன்று கொஞ்சம் தடுமாறினார்கள். இன்னும் எங்களுக்கு ஆறு போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன். பந்துவீச்சில் மதுஷங்கா சிறப்பாகவே பந்து வீசி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது நம்பிக்கை உரியதாக இருந்தது. அதை போன்று எங்களுடைய கேப்டன் ஷனகா மீண்டு வருவார் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now